முக்கியமான நேரத்தில் மோசமா சொதப்பிய ராயுடு!! இப்படிலாம் பண்ணா உங்கள எப்படி உலக கோப்பைக்கு கூட்டிட்டு போறது..?

By karthikeyan VFirst Published Mar 6, 2019, 2:21 PM IST
Highlights

கடைசி 4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் மட்டுமே தேவை. அப்படியான இக்கட்டான சூழலில் எதிரணியை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்துவது முக்கியம். அது பவுலர்களின் கையில் மட்டுமல்ல, ஃபீல்டர்களின் கையிலும் உள்ளது.
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் சொதப்பிவருகிறார். 

நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக ராயுடு உறுதி செய்யப்பட்டார். ராயுடுவின் மூலம் அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக கருதப்பட்டது. உலக கோப்பை அணியிலும் ராயுடு எடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ராயுடு நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடியிருந்தாலும் கூட அதுகுறித்த விவாதங்கள் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. எனவே இன்னும்கூட உலக கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்ய ராயுடு சிறப்பாக வேண்டியிருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் அவர் அடித்த 90 ரன்கள் அபாரமானது. எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. நாக்பூரில் நடந்த நேற்றைய போட்டியில் 9வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்டார். எனவே பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை தவறவிட்ட ராயுடு வெறும் 18 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

பேட்டிங்கில் தொடர்ந்து இதேபோல் சொதப்பினால் உலக கோப்பை அணியில் இடம்பெறுவது சந்தேகமாகிவிடும். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிவரும் நிலையில், அவரை எடுத்தால் ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும் என்று தேர்வுக்குழு நினைத்துவிட்டால் ராயுடுவின் நிலை கவலைக்கிடம். எனவே சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராயுடு.

பேட்டிங்கில்தான் சொதப்பினார் என்றால், ஃபீல்டிங்கிலும் ராயுடு படுமோசமாக சொதப்புகிறார். ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவது ரொம்ப முக்கியம். அதுவும் உலக கோப்பையில் ஃபீல்டிங்கில் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டே தீர வேண்டும். 

நேற்றைய போட்டியில் பேட்டிங்கில்தான் சொதப்பினார் என்று பார்த்தால், முக்கியமான நேரத்தில் ஃபீல்டிங்கிலும் சொதப்பினார். கடைசி 4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் மட்டுமே தேவை. அப்படியான இக்கட்டான சூழலில் எதிரணியை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்துவது முக்கியம். அது பவுலர்களின் கையில் மட்டுமல்ல, ஃபீல்டர்களின் கையிலும் உள்ளது.

ஷமி வீசிய 47வது ஓவரின் இரண்டாவது பந்தில் நாதன் லயன் பேக்வார்டு பாயிண்ட்டில் அடித்துவிட்டு ஓட முயன்றார். ஆனால் கேதர் ஜாதவ் பந்தை பிடித்ததை அடுத்து, ஓட முயன்றவர் திரும்பிவந்தார். இதற்கிடையே அவரை ரன் அவுட் செய்வதற்காக கேதர் ஜாதவ் வீச, பந்து ஸ்டம்பில் படாமல் நேரடியாக ராயுடுவிடம் சென்றது. ஆனால் அந்த பந்தை ராயுடு பிடிக்காமல் தவறவிட்டார். இதையடுத்து லயனும் ஸ்டோய்னிஸும் ஒரு ரன் ஓடினர். அந்த நேரத்தில் ஸ்டோய்னிஸை பேட்டிங் முனைக்கு வரவிடாமல் மறுமுனையில் நிற்கவைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் ராயுடு பந்தை விட்டதால் அந்த அணிக்கு ஒரு ரன் கிடைத்தது. ஸ்டோய்னிஸ் பேட்டிங் முனைக்கு வந்தார்.

இக்கட்டான சூழல்களில் இதுபோன்ற தவறுகள் எல்லாம் செய்யக்கூடாது. ஆனால் ராயுடு தொடர்ந்து சொதப்பிவருகிறார். அடுத்துவரும் 3 போட்டிகளும் ராயுடுவுக்கு ரொம்ப முக்கியம்.
 

click me!