வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் 5 மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தப் போட்டியின் மூலமாக திலக் வர்மா சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். இதே போன்று வங்கதேச அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, தன்சிம் ஹசன் ஷாகிப் இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிறார். இதையடுத்து வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில் தொடக்க வீரர்களாக தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால், லிட்டன் தாஸ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்தில் கிளீன் போல்டானார்.
அடுத்து மற்றொரு தொடக்க வீரர் தன்ஷித் ஹசன் 13 ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த அனாமுல் ஹக் 4 ரன்களில் வெளியேறினார். இவர், இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி ஆரம்ப காலகட்டத்தில் வைத்திருந்த ஹேர்ஸ்டைலில் வந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கேப்டன் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர், நின்னு நிதானமாக விக்கெட் கொடுக்காமல் ரன்கள் சேர்த்தார்.
இதற்கிடையில், மெஹிடி ஹசன் மிராஸ் களமிறங்கி அவர் 14 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அப்போது தான் ஷாகிப் மற்றும் தவ்ஹீத் ஹிரிடோய் இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டிற்கு 101 ரன்கள் குவித்தது. அப்போது ஷாகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தவ்ஹீத் 54 ரன்களில் வெளியேறினார்.
இந்த நிலையில், தான் ஷமீம் ஹூசைன் களமிறங்கினார். அவர் 1 ரன் எடுத்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும், இதற்கு முன்னதாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் கைப்பற்றிய சீனியர் வீரர்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.
அனில் கும்ப்ளே – 337 விக்கெட்டுகள்
ஜவஹல் ஸ்ரீநாத் – 315 விக்கெட்டுகள்
அஜித் அகர்கர் – 288 விக்கெட்டுகள்
ஜாகிர்கான் – 282 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் – 269 விக்கெட்டுகள்
கபில் தேவ் – 253 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா – 200 விக்கெட்டுகள்
அதுமட்டுமின்றி 2500 ரன்களுக்கு மேல் எடுத்து 200 விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். கபில் தேவ் 253 விக்கெட்டுகளும், 3783 ரன்களும் எடுத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 2578 ரன்களுடன், 200 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
The moment when Jadeja completed 200 wickets in ODIs.
- A historic moment....!!!!!!!pic.twitter.com/uv4ulOrYpk