
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகிவிட்டு, புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியை கேப்டனாக இருந்து வழிநடத்திவருகிறார் தோனி. 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களிலும் சிஎஸ்கே அணி தடை பெற்றிருந்தது. அந்த 2 சீசன்களை தவிர மற்ற 12 சீசன்களிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனி, 4 முறை கோப்பையை வென்று கொடுத்தார்.
2020 ஐபிஎல் சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை பிளே ஆஃபிற்கு அழைத்து சென்ற சாதனைக்குரியவர் தோனி. 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, தான் ஆடும்போதே அடுத்த கேப்டனை வளர்த்து கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் இந்த சீசனிலேயே கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார் தோனி. இதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே, சிஎஸ்கே அணியின் முதல் வீரராக, தோனியை விட அதிக தொகைக்கு ஜடேஜா தான் தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.