
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அஸ்வினுக்கு தெரிய வரவே, மனம் உடைந்த அஸ்வின் ஒரே நாளில் தனது அம்மாவை சென்று பார்த்துவிட்டு மீண்டும் போட்டிக்கு வந்துள்ளார். இது குறித்து அஸ்வின் மனம் திறந்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜ்கோட்டில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆம் நாளில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ஆனால், இந்த சாதனையின் மகிழ்ச்சி ஒருநாள் முழுவதும் நீடிப்பதற்குள்ளாக அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் ராஜ்கோட்டிலிருந்து சென்னைக்கு விமானம் ஏதும் இல்லாத நிலையில் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் சென்னைக்கு வர உதவியாக இருந்துள்ளனர்.
புஜாராவும் உதவி இருக்கிறார். 3ஆவது நாளில் அணியுடன் இல்லாத நிலையில் மீண்டும் 4ஆவது நாளில் அணிக்கு திரும்பினார். இது குறித்து அஸ்வின் கூறியிருப்பதாவது: நான் 500 விக்கெட்டுகள் எடுத்த பிறகு எனது பெற்றோர் மற்றும் மனைவியிடமிருந்து அழைப்பு வரவில்லை. இரவு 7 மணிக்கு நான் எனது மனைவியை அழைத்தேன். அப்போது தான் எனது அம்மாவின் உடல்நிலை குறித்து சொன்னார்.
சென்னைக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் இருந்தேன். எனக்கு அழுகை வந்தது. யாருடனும் பேச தோன்றவில்லை. பின்னர், எனது மனைவி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். நான் வீட்டிற்கு சென்றால் அணியில் 10 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பார்கள். நான் வீட்டிற்கு சென்றேன். அம்மாவை பார்ப்பதற்கு அனுமதி இல்லை. ரோகித் சர்மா வாடகை விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார்.
புஜாரா எனக்காக ஒரு வாடகை விமானத்தை முன்பதிவு செய்து கொடுத்தார். என்னுடன் பிசியோ கமலேஷ் வந்தார். ரோகித் சர்மா தான், கமலேஷை என்னுடன் இருக்க செய்தார். அவரது செயலை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அடிக்கடி ரோகித் சர்மா, கமலேஷூக்கு போன் செய்து நலம் விசாரித்துக் கொண்டே இருந்தார். இப்படிப்பட்ட ஒரு கேப்டனை நான் பார்த்ததில்லை. எத்தனையோ கேப்டன்களுடன் விளையாடியிருக்கிறே. ஆனால், ஒரு நல்ல லீடர்ஷிப் என்றால் அது ரோகித் சர்மா தான்.
ரோகித்தின் நல்ல மனசுக்கு தான் 5 ஐபிஎல் டைட்டில் ஜெயிச்சிருக்கிறார். தோனிக்கு நிகராக டைட்டில் வென்றிருக்கிறார் என்றால் கடவுள் ஒன்றும் சும்மா கொடுக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.