மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான 19ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த 19ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சஜீவன் சஞ்சனா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எல்லீஸ் பெர்ரி 6 விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். மொலினெக்ஸ், டிவைன், ஆஷா ஷோபனா, ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் 114 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. இதில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 11 ரன்களிலும், ஷோபி மோலினெக்ஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த ஷோஃபி டிவைன் 4 ரன்களில் நடையை கட்டினார். கடைசியாக எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், எல்லீஸ் பெற்றி 40 ரன்களும், ரிச்சா கோஷ் 36 ரன்களும் எடுக்கவே ஆர்சிபி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதோடு 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தற்போது ஆர்சிபி அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாளை குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடைபெறுகிறது.