ENG vs IND: படுமட்டமான, கோழைத்தனமான பேட்டிங்..! இந்திய அணியை கடுமையாக விளாசிய முன்னாள் கோச் ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Jul 5, 2022, 8:33 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு, 2வது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடியதுதான் காரணம் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிகக்கடுமையாக சாடியுள்ளார். 
 

இந்தியா - இங்கிலாந்து இடையே ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி நடந்தது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா கொரோனா காரணமாக ஆடாததால் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்தார். 

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 98 ரன்களுக்கே ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்து காப்பாற்றினர்.

89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட், 146 ரன்களை குவித்தார். ஜடேஜா 104 ரன்களை குவித்தார். 6வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். கடைசி நேரத்தில் பும்ரா அதிரடியாக ஆடி 16 பந்தில் 31 ரன்களை விளாசினார். ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் பும்ரா 29 ரன்களை அடித்தார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 35 ரன்கள் கிடைக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட்களான கவாஸ்கர், பாண்டிங் சாதனைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியும் 83 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணியை ரிஷப் பண்ட் சதமடித்து காப்பாற்றியதை போல், இங்கிலாந்து அணியை பேர்ஸ்டோ சதமடித்து காப்பாற்றினார். அபாரமாக பேட்டிங் ஆடிய பேர்ஸ்டோ 106 ரன்களை குவித்தார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 31 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 284 ரன்கள் அடித்தது.

132 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில், புஜாரா, ரிஷப் பண்ட்டை தவிர மற்றவர்கள் இந்த இன்னிங்ஸிலும் சொதப்பினர். புஜாரா 66 ரன்களும், ரிஷப் பண்ட் 57 ரன்களும் அடித்தனர். விராட் கோலி, கில், விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற, 378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் (142) மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் (114) அபார சதங்களால் கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே இலக்கை அடித்து இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி.. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு

இந்திய அணி 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசன் வரை இந்திய அணி பேட்டிங் ஆடியிருந்தால் 450 - 500 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கலாம். இலக்கும் கூடியிருந்திருக்கும்; அதேவேளையில், இங்கிலாந்து அணிக்கு குறைவான நேரத்தில் மிகப்பெரிய இலக்கை விரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். இந்திய அணி 4ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே ஆல் அவுட்டாகிவிட்டதால், இலக்கை விரட்டுவதற்கு போதிய நேரம் கிடைத்ததுடன், இலக்கும் பெரிய கடினமில்லாததாக அமைந்தது.

அதனால் தான் துணிச்சலாக இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே இலக்கை விரட்டி, வெற்றியும் பெற்றனர்.

இந்திய அணியின் தோல்விக்கு, 2வது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடியதுதான் காரணம் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். 

இதையும் படிங்க - இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து சாதனை வெற்றி..! ரூட் - பேர்ஸ்டோவிற்கு சச்சின் அதீத புகழாரம்

இதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தோல்வி அதிருப்தியளிக்கிறது. 4ம் நாள் ஆட்டத்தில் இன்னும் 2 செசன்கள் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். தடுப்பாட்டம் ஆடியதுடன், மிகவும் கோழைத்தனமாக பேட்டிங் ஆடினார்கள். 

சில விக்கெட்டுகளை இழந்தபின்னராவது, அடித்து ஆடியிருக்க வேண்டும். ஏனெனில் ஆட்டத்தின் அந்த கட்டத்தில் ஸ்கோர் மிக முக்கியம். ஒரு கூட்டுக்குள் அடைந்துகொண்டு விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். இங்கிலாந்துக்கு பேட்டிங் ஆட போதிய கால அவகாசம் கொடுத்ததுதான் அவர்களது வெற்றிக்கு காரணம். அதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று ரவி சாஸ்திரி கடுமையாக சாடியுள்ளார்.
 

click me!