
ஐபிஎல் 15வது சீசன் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்கு முன்பாக தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றுமே இந்த சீசனில் இதுவரை மிக சுமாராகத்தான் இருந்தது.
பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா சோபிக்காததால் சிஎஸ்கேவிற்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அதுவே அந்த அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கையும் பாதிக்கிறது.
பவுலிங்கில் தீபக் சாஹர் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தீபக் சாஹர் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கக்கூடிய பவுலர். அவர் இல்லாததால் பவர்ப்ளேயில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. டெத் ஓவர்களை சிறப்பாக வீசும் பவுலர்களும் இல்லை. மிடில் ஓவர்களில் எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்குமளவிற்கான ஸ்பின்னர்களும் இல்லை. இப்படியாக பவுலிங்கும் மோசமாகவே உள்ளது.
சிஎஸ்கே அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், சிஎஸ்கே அணி இந்த சீசனில் செய்த தவறு என்னவென்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ஜடேஜாவை கேப்டனாக நியமித்திருக்கக்கூடாது. அவர் கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டுமே ஆடவிட்டிருந்தால் ஆல்ரவுண்டராக அசத்தியிருப்பார். சிஎஸ்கே அணி ஃபாஃப் டுப்ளெசிஸை விடுவித்திருக்கக்கூடாது. சிஎஸ்கேவின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் டுப்ளெசிஸ். அனுபவம் வாய்ந்த வீரரான டுப்ளெசிஸ் ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக நிறைய போட்டிகளை ஜெயித்து கொடுத்திருக்கிறார்.
தோனி கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை முன்பே எடுத்திருந்தால், கண்டிப்பாக டுப்ளெசிஸை விடுவித்திருக்கக்கூடாது. டுப்ளெசிஸை தக்கவைத்து அவரையே கேப்டனாகவும் நியமித்திருக்க வேண்டும். ஜடேஜா ஒரு வீரராக, கேப்டன்சி அழுத்தம் எல்லாம் இல்லாமல் ஃப்ரீயாக விளையாடியிருப்பார். இப்படி நடந்திருந்தால் சிஎஸ்கே அணி வேற லெவலில் ஆடியிருக்கும் என்றார் சாஸ்திரி.
டுப்ளெசிஸ் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 633 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் 2ம் இடத்தை பிடித்த டுப்ளெசிஸ் ஆகிய இருவருமே சிஎஸ்கே அணியை சேர்ந்தவர்கள். சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருவரும் அபாரமாக விளையாடி நிறைய ஸ்கோர் செய்தனர். அதனால் சிஎஸ்கே அணி கோப்பையையும் வென்றது. டுப்ளெசிஸை சிஎஸ்கே அணி விடுவித்த நிலையில், அவரை ஏலத்தில் எடுத்த ஆர்சிபி அணி கேப்டனாக நியமித்தது. டாப் ஆர்டரில் பேட்டிங்கில் ஆர்சிபிக்காக சிறப்பாக ஆடிவரும் டுப்ளெசிஸ், கேப்டன்சியிலும் அசத்திவருகிறார். டுப்ளெசிஸ் இல்லாதது சிஎஸ்கேவிற்கு பெரிய இழப்பு. அவர் இல்லாத இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டும் தடுமாறிவருகிறார். டுப்ளெசிஸ் இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.