
ஐபிஎல் 15வது சீசன் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்கு முன்பாக தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றுமே இந்த சீசனில் இதுவரை மிக சுமாராகத்தான் இருந்தது.
பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா சோபிக்காததால் சிஎஸ்கேவிற்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அதுவே அந்த அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கையும் பாதிக்கிறது.
பவுலிங்கில் தீபக் சாஹர் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தீபக் சாஹர் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கக்கூடிய பவுலர். அவர் இல்லாததால் பவர்ப்ளேயில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. டெத் ஓவர்களை சிறப்பாக வீசும் பவுலர்களும் இல்லை. மிடில் ஓவர்களில் எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்குமளவிற்கான ஸ்பின்னர்களும் இல்லை. இப்படியாக பவுலிங்கும் மோசமாகவே உள்ளது.
சிஎஸ்கே அணி ஏலத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். ராயுடு, பிராவோ, ராபின் உத்தப்பா ஆகிய, ஏற்கனவே சிஎஸ்கேவிற்காக ஆடிய வீரர்கள் மீதே அதிக கவனம் செலுத்தியது சிஎஸ்கே அணி. ஆனால் மற்ற அணிகளோ திறமையான இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்து அசத்துகிறது.
சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், அதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் எந்த இடத்திலும் நாங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. எங்கள் அணியில் சில வீரர்கள் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது. சில ஏரியாக்களில் வலிமையற்று இருக்கிறோம். அந்த ஏரியாக்களில் வீரர்கள் முன்வந்து பெர்ஃபாம் செய்ய வேண்டும்.
தொடர் தோல்விகளால் எங்கள் அணியின் சுயம் சார்ந்த சில சந்தேகங்கள் வீரர்களுக்கே எழுந்துள்ளன. வீரர்கள் தொடர் தோல்விகளால் சோர்வடைந்துள்ளனர். விரைவாக இந்த தோல்வியிலிருந்து மீண்டு ரிதத்திற்கு வந்து, இந்த தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.