
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
8 போட்டிகளில் வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்த விராட் கோலி, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். ஆனால் அதிலும் 9 ரன்னில் ஆட்டமிழக்க, 9 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி. இது மிக மிகக்குறைவு. இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 38வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி தொடர்ந்து திணறிவரும் நிலையில், அவருக்கு சிறிய பிரேக் தேவை என்றும், அதனால் ஐபிஎல்லில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவருகின்றனர். அந்த வரிசையில் ரவி சாஸ்திரியும் இணைந்துள்ளார்.
கோலி குறித்து பேசிய ரவி சாஸ்திரி, அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் தொடர்ச்சியாக ஆடிவரும் விராட் கோலிக்கு கண்டிப்பாக ஒரு பிரேக் தேவை. சில நேரங்களில் பேலன்ஸ் தேவை. சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 6-7 ஆண்டுகள் ஆடவேண்டும் என்றால், ஐபிஎல்லில் பிரேக் எடுக்க வேண்டும். 14-15 ஆண்டுகள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவரும் கோலிக்கு பிரேக் தேவை. விராட் மட்டுமல்ல; தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவரும் எந்த வீரராக இருந்தாலும் பிரேக் தேவை. இந்தியாவிற்காக இன்னும் பல ஆண்டுகள் நன்றாக ஆடவேண்டும் என நினைத்தால் தேவையான நேரத்தில் பிரேக் எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.