அந்த விஷயத்துல பிரச்னை இருக்குறது உண்மைதான்.. ஆனால் தோனியை பின்னாடி இறக்கியதில் தப்பே இல்ல.. அடம்பிடிக்கும் சாஸ்திரி

By karthikeyan VFirst Published Jul 13, 2019, 12:27 PM IST
Highlights

கவாஸ்கர், கங்குலி என பலரும் தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்கி ரிஷப்புடன் ஆடவிட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி செய்திருந்தால் விக்கெட் இழப்பு ஏற்பட்டிருக்காமல் பார்ட்னர்ஷிப் அமைந்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 
 

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனியை பின்வரிசையில் இறக்கிய முடிவை நியாயப்படுத்தித்தான் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இறுதி போட்டி நடக்கவுள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் களத்தில் நின்ற நிலையில், ஐந்தாம் வரிசையில் அனுபவ வீரர் தோனியை அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பியது மிகப்பெரிய தவறு. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகாவது தோனி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்கு பிறகும் பாண்டியா தான் அனுப்பப்பட்டார். ரிஷப் - பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு போயி ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட்ட தவறான ஷாட் ஆட அனுமதிக்காமல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதங்கம். 

கவாஸ்கர், கங்குலி என பலரும் தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்கி ரிஷப்புடன் ஆடவிட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி செய்திருந்தால் விக்கெட் இழப்பு ஏற்பட்டிருக்காமல் பார்ட்னர்ஷிப் அமைந்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆனாலும் தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியது சரியான முடிவுதான் என்று ரவி சாஸ்திரி நியாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, நான்காம் வரிசையில் சிக்கல் நீடிப்பது உண்மைதான். நான்காம் வரிசை வீரர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆனால் தோனியை ஏழாம் வரிசையில் இறக்கிய முடிவில் ஒட்டுமொத்த அணியும் உறுதியாகவே இருந்தது. தோனி சிறந்த ஃபினிஷர் என்பதால் அவரால் அந்த போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியும் என நம்பினோம். 

தோனியை முன்கூட்டியே இறக்கியிருந்தால் ஒட்டுமொத்த விரட்டலும் செத்து போயிருக்கும். ரிஷப் பண்ட் நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அவர் மட்டும் அவுட்டாகாமல் இருந்திருந்தால்... அதுதான் கிரிக்கெட். அதனால் தோனியை டவுன் ஆர்டரில் இறக்குவதில் தெளிவாகவே இருந்தோம். அதுமட்டுமல்லாமல் தோனி ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும். ஜேம்ஸ் நீஷம் வீசும் கடைசி ஓவரில் எத்தனை ரன்கள் அடிக்க முடியும், ஒவ்வொரு பந்திலும் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற மொத்த கணக்கீடுகளும் தோனியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்திருக்கும். அவர் பெவிலியன் திரும்பிய பிறகும், அவரது உடல்மொழியில் அந்த தீவிரம் தெரிந்தது என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார். 
 

click me!