அவரு அதுக்கு சரியா வரமாட்டாருனு சொல்லி ஓரங்கட்டுனீங்க.. அவரு மட்டும் டீம்ல இருந்திருந்தா கண்டிப்பா நாம ஜெயிச்சுருக்கலாம்.. அடித்து சொல்லும் கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jul 13, 2019, 11:35 AM IST
Highlights

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் 4ம் வரிசையை பூர்த்தி செய்ய பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்கள். ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே, அம்பாதி ராயுடு என பலர் அந்த வரிசையில் இறக்கப்பட்டனர். ஒருவழியாக அம்பாதி ராயுடுதான் அந்த இடத்தில் உறுதி செய்யப்பட்டார். 
 

உலக கோப்பையில் இந்திய அணி தோற்றதை அடுத்து அணி நிர்வாகத்திடம் சில சர்ச்சை முடிவுகள் குறித்த அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. 

உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. குறிப்பாக இந்திய அணியின் பெரிய பலவீனமாக இருந்த மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் 4ம் வரிசையை பூர்த்தி செய்ய பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்கள். ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே, அம்பாதி ராயுடு என பலர் அந்த வரிசையில் இறக்கப்பட்டனர். ஒருவழியாக அம்பாதி ராயுடுதான் அந்த இடத்தில் உறுதி செய்யப்பட்டார். 

கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர், நான்காம் வரிசை வீரர் கண்டறியப்பட்டுவிட்டதாக ராயுடுவை குறிப்பிட்டு கேப்டன் கோலி தெரிவித்தார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடர் வரை ராயுடு அணியில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். 

உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு இடம்பெற்றிருந்தும் கூட, 2 வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், ராயுடு அழைக்கப்படவில்லை. தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும் விஜய் சங்கருக்கு பதில் மயன்க் அகர்வாலும் அணியில் இணைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ராயுடு. 

இந்திய அணியின் பெரிய பிரச்னையாகவும் பலவீனமாகவும் இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கல், உலக கோப்பையிலும் தொடர்ந்தது. அதன் எதிரொலி தான் இந்திய அணியின் தோல்வி. மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என்பதை எதிரணிகளுக்கு வெளிப்படையாக தெரியும் அளவிற்கு பலவீனமாக இருந்தது. 

இந்திய அணி அரையிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறியதை அடுத்து, இந்திய அணி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக செய்த பரிசோதனை முயற்சிகள் குறித்த கேள்விகளையும் இந்திய அணி தேர்வு குறித்த கேள்விகள் மற்றும் அதிருப்தி, ஆதங்கங்களை முன்னாள் வீரர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர். 

அந்தவகையில் நான்காம் வரிசையில் சிறந்த பேட்டிங் டெக்னிக் கொண்ட ரஹானேவை எடுக்காதது குறித்த அதிருப்தியை கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ரஹானேவை நான்காம் வரிசையில் முயற்சி செய்தீர்கள். நீண்டகாலமாக அவர் தான் நான்காம் வரிசை வீரராக இருந்தார். ஆனால் திடீரென அவர் ஒரு தொடக்க வீரர் என்று சொல்லி ஓரங்கட்டினீர்கள். அவரால் மிடில் ஆர்டரில் ரன் சேர்க்க முடியவில்லை என்றும் அவரால் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க இயலாததால் அவர் ஒரு ஃபினிஷர் இல்லை என்றும் கூறி அவருக்கு தொடக்க வீரர் என்ற முத்திரையை குத்தி ஓரங்கட்டிவிட்டீர்கள். இதுபோன்ற முடிவுகளை நியாயப்படுத்துவதற்கு பல காரணங்களை கூறிவிட்டீர்கள்.

இங்கிலாந்து கண்டிஷனுக்கும் அரையிறுதி போட்டி நடந்த மான்செஸ்டர் கண்டிஷனுக்கும் சிறந்த பேட்டிங் டெக்னிக் கொண்ட ஒரு வீரர் தேவை. அந்த வீரர் ரஹானே தான் என்று கடுமையாக சாடியுள்ளார் கவாஸ்கர். 
 

click me!