ரஷீத் கானின் மண்டையை பதம்பார்த்த ஃபெர்குசனின் முரட்டு பவுன்ஸர்.. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அடுத்த அடி

By karthikeyan VFirst Published Jun 9, 2019, 11:14 AM IST
Highlights

ஆஃப்கானிஸ்தான் இன்னிங்ஸின் போது ரஷீத் கான் களத்தில் இருந்தபோது, 34வது ஓவரை வீசிய ஃபெர்குசன், அந்த ஓவரின் நான்காவது பந்தை 138 கிமீ வேகத்தில் அபாரமான பவுன்ஸராக வீசினார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக கருத்து இருந்தாலும், ஆஃப்கானிஸ்தான் அணி எப்படி ஆடுகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் ஆவலாக இருக்கின்றனர். 

ஆஃப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியிடமும் தோற்றது. இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடியது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, ஜேம்ஸ் நீஷம் மற்றும் ஃபெர்குசனின் பவுலிங்கில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து வெறும் 172 ரன்களை மட்டுமே எடுத்தது. 173 ரன்கள் என்ற இலக்கை 33வது ஓவரிலேயே எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

இந்த வெற்றியின் மூலம் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது நியூசிலாந்து அணி. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே ஆஃப்கானிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது. 

ஆஃப்கானிஸ்தான் இன்னிங்ஸின் போது ரஷீத் கான் களத்தில் இருந்தபோது, 34வது ஓவரை வீசிய ஃபெர்குசன், அந்த ஓவரின் நான்காவது பந்தை 138 கிமீ வேகத்தில் அபாரமான பவுன்ஸராக வீசினார். அந்த பந்து ரஷீத் கானின் ஹெல்மெட்டை பதம்பார்த்து போல்டும் ஆனது. ரஷீத் கானின் ஹெல்மெட்டில் அடித்ததும் ஒரு நொடி கலங்கிநின்றார் ரஷீத். உடனடியாக சக பேட்ஸ்மேன் மற்றும் நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் ரஷீத்தை சுற்றிவிட்டனர். அதன்பின்னர் களத்திலிருந்து வெளியேறிய ரஷீத் கான், பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அவருக்கு ஓய்வளிக்கும் விதமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச வைக்கப்படவில்லை. அந்த அடியால் பெரிய பாதிப்பு இருக்காது. அடுத்த போட்டியில் ஆடுவார். ஆனால் முன்னெச்சரிக்கையாக நேற்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. 

காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷேஷாத் ஏற்கனவே உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அதுவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு. எனவே ரஷீத் கான் போன்ற நட்சத்திர வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அந்த அணிக்கு மிக முக்கியம். ரஷீத் கானுக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனவே அடுத்த போட்டியில் ஆடுவதில் சிக்கல் இருக்காது. 
 

click me!