ஷாகிப் அல் ஹசனின் போராட்ட சதம் வீண்.. வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 9, 2019, 9:57 AM IST
Highlights

387 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஜோடியை தனது வேகத்தில் மிரட்டினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆர்ச்சரின் அதிவேகத்தை சமாளிக்க முடியாமல் தமீம் இக்பாலும் சௌமியா சர்க்காரும் திணறினர். 

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கார்டிஃபில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 386 ரன்களை குவித்தது. 387 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி, 280 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ராய் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே பேர்ஸ்டோ ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராயுடன் ரூட் ஜோடி சேர்ந்தார். ராய் அதிரடியாக ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரூட் ஆடினார். அபாரமாக ஆடிய ராய் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை விளாசினார். ரூட் அவுட்டாக, அவரை தொடர்ந்து 150 ரன்களை கடந்த ராயும் 153 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

35வது ஓவரில் ராய் வெளியேறினார். அதன்பின்னர் அவர் விட்டுச்சென்ற பணியை அந்த இடத்திலிருந்தே தொடர்ந்த பட்லர் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மோர்கன் 34 ரன்களில் வெளியேறினார். இதற்கிடையே ஸ்டோக்ஸ் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். ஆனால் வோக்ஸும் பிளங்கெட்டும் இணைந்து கடைசி 2 ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து மிரட்டினர். இவர்களின் கடைசி நேர அதிரடியால் இங்கிலாந்து அணி 386 ரன்களை குவித்தது. 

387 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஜோடியை தனது வேகத்தில் மிரட்டினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆர்ச்சரின் அதிவேகத்தை சமாளிக்க முடியாமல் தமீம் இக்பாலும் சௌமியா சர்க்காரும் திணறினர். இருவரும் சொற்ப ரன்களில ஆட்டமிழந்தனர். சௌமியா சர்க்கார் 2 ரன்களிலும் தமீம் இக்பால் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

3வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசனுடன் மற்றொரு அனுபவ வீரரான முஷ்ஃபிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். ஆனால் முஷ்ஃபிகுரை 44 ரன்களில் வீழ்த்தினார் பிளங்கெட். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷாகிப் அல் ஹசன், தனி ஒருவனாக போராடி சதமடித்தார். சதமடித்த பிறகும் ஷாகிப் போராட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. போராடினாலும் அடைய முடியாத இலக்காக இருந்ததால் நம்பிக்கையை இழந்த வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 49வது ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. இதையடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. 
 

click me!