
இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கை அணி மீது பேட்டிங், பவுலிங் என அனைத்து விதத்திலும் ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 262 ரனகள் அடித்தது. 263 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா அடித்து ஆடி, 24 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசி, முதல் 5 ஓவரில் இந்திய அணி 50 ரன்களுக்கு மேல் குவிக்க உதவினார்.
அதன்பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். சூர்யகுமார் யாதவும் அடித்து ஆடினார். ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாக ஆடி 86 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்தார் ஷிகர் தவான்.
இந்திய இளம் வீரர்களின் அதிரடியான பேட்டிங்கால் 37வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, இந்தியா - இலங்கை இடையேயான போட்டி, யுனிவர்சிட்டி அணிக்கும் ஸ்கூல் அணிக்கும் இடையே நடந்த போட்டி போல இருந்தது. திறமை, ஆட்டத்தின் மீதான புரிதல், திட்டம் மற்றும் அதை செயல்படுத்துதல் ஆகிய அனைத்திலுமே இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இலங்கை கிரிக்கெட்டுக்கு இது மிகச்சவாலான நேரம். ஏனெனில் சொந்த மண்ணில் தங்களுக்கு சாதகமாக பெரிய ஸ்கோரை அடிக்குமளவிற்கான ஃப்ளாட் பிட்ச்சை தயார் செய்தும் கூட, சராசரி ஸ்கோரையே அடித்தது இலங்கை அணி.
இலங்கை வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை ஆடிய விதம், ஸ்பின்னை ஆடவே தெரியாதுபோல இருந்தது. பொதுவாக இலங்கை பேட்ஸ்மேன்கள் ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்வார்கள். ஆனால் தற்போதைய இலங்கை வீரர்கள் அந்த லெவலை இன்னும் எட்டவில்லை என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.