ஷிவம் துபே பொறுப்பான பேட்டிங்; டெவாட்டியா அதிரடி ஃபினிஷிங்! ஆர்சிபிக்கு டீசண்ட்டான இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்

By karthikeyan VFirst Published Apr 22, 2021, 9:44 PM IST
Highlights

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து,  20 ஓவரில் 177 ரன்களை அடித்து 178 ரன்கள் என்ற நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ராஜஸ்தான் ராயல்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பட்லர் மற்றும் மனன் வோரா ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், அருமையான இன்ஸ்விங்குகளை வீசினார். ஆனாலும் அந்த ஓவரில் பட்லர் 2 பவுண்டரிகளை விளாசினார். 2வது ஓவரை ஜாமிசனும் நன்றாக வீசினார்.

மீண்டும் முகமது சிராஜ் வீசிய 3வது ஓவரில் பட்லர் சிராஜின் பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே மனன் வோரா ஜாமிசனின் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 4ம் வரிசையில் களத்திற்கு வந்த டேவிட் மில்லர், சிராஜின் பந்தில் ரன்னே அடிக்காமல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, சஞ்சு சாம்சனும் 21 ரன்னில் அவுட்டாக 43 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது ராஜஸ்தான் அணி. 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஷிவம் துபேவும் ரியான் பராக்கும் இணைந்து பொறுப்பை உணர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஷிவம் துபே அபாரமாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து வேகமாக ஸ்கோர் செய்ய, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ரியான் பராக், ஹர்ஷல் படேல் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்து அதிரடி பேட்டிங்கை தொடங்கிய நிலையில், ஜாமிசனின் அடுத்த ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்தார். ஹர்ஷல் படேல் வீசிய 14வது ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 

சிறப்பாக ஆடிய ரியான் பராக் 16 பந்தில் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதத்தை நெருங்கிய துபே, 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த டெவாட்டியா, டெத் ஓவர்களில் அடித்து ஆடி 23 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

டெவாட்டியா 19வது ஓவரின் கடைசி பந்தில் டெவாட்டியா அவுட்டாக, கடைசி ஓவரின் முதல் பந்தில் கிறிஸ் மோரிஸும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் பெரிதாக ரன் கிடைக்கவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் ஒரு சிக்ஸர் அடித்து 177 ரன்களை எட்ட உதவினார்.

43 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 177 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்ட ஷிவம் துபே, டெவாட்டியா, ரியான் பராக் ஆகியோரின் பேட்டிங் உதவியது.
 

click me!