பவர்ப்ளேயில் படுமட்டமா பேட்டிங் ஆடிய ராஜஸ்தன் ராயல்ஸ்..! பவுலிங்கில் பட்டைய கிளப்பிய ஆர்சிபி

By karthikeyan VFirst Published Apr 22, 2021, 8:13 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்ப்ளேயில் படுமோசமாக பேட்டிங் ஆடியது.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ராஜஸ்தான் ராயல்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இரு அணிகளுமே தலா ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளன. ஆர்சிபி அணியில் ரஜாத் பட்டிதருக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்ஸன் ஆடுகிறார். ராஜஸ்தான் அணியில் ஜெய்தேவ் உனாத்கத்துக்கு பதிலாக, விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் ரிஸ்ட் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் ஆடுகிறார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பட்லர் மற்றும் மனன் வோரா ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், அருமையான இன்ஸ்விங்குகளை வீசினார். ஆனாலும் அந்த ஓவரில் பட்லர் 2 பவுண்டரிகளை விளாசினார். 2வது ஓவரை ஜாமிசனும் நன்றாக வீசினார்.

மீண்டும் முகமது சிராஜ் வீசிய 3வது ஓவரில் பட்லர் சிராஜின் பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே மனன் வோரா ஜாமிசனின் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 4ம் வரிசையில் களத்திற்கு வந்த டேவிட் மில்லர், சிராஜின் பந்தில் ரன்னே அடிக்காமல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, 18 ரன்களுக்கே ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

பவர்ப்ளேயின் கடைசி ஓவரில்(6வது ஓவரில்) சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகள் அடிக்க, பவர்ப்ளேயை 32 ரன்களுக்கு முடித்தது ராஜஸ்தான் அணி. பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்ததால், ராஜஸ்தான் அணியின் ரன்வேகம் படுமந்தமாக இருந்தது. சிராஜ் பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 8வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், முதல் பந்தில் சஞ்சு சாம்சனுக்கு சிக்ஸர் கொடுத்தாலும், அடுத்த பந்திலேயே சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார்.

click me!