
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்ப்ரீத் சிங், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர்.
இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். சஞ்சு சாம்சன் 21 பந்தில் 30 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பட்லருடன் ஜோடி சேர்ந்த ஹெட்மயர் காட்டடி அடித்தார். 14 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து ஹெட்மயர் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி சதமடித்த பட்லர் 68 பந்தில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 20 ஓவரில் 193 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 194 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.
194 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 5 பந்தில் 10 ரன்களுக்கும், 3ம் வரிசையில் இறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி.
அதன்பின்னர் இஷான் கிஷனும் திலக் வர்மாவும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், இஷான் கிஷன் 54 ரன்களுக்கும், திலக் வர்மா 33 பந்தில் 61 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆட்டம் அப்படியே ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. டிம் டேவிட் (1), டேனியல் சாம்ஸ்(0) சொதப்ப, பொல்லார்டாலும் ஒன்றுமே செய்ய முடியாமல் போக, 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 170 ரன்கள் மட்டுமே அடித்து 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.