திடீரென என்னை அழைத்து, அங்கே போய் நில் என்றார் டிராவிட்.. அதற்கு அடுத்த பந்தே கேட்ச் வந்தது! ரெய்னா சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Jun 27, 2020, 2:50 PM IST
Highlights

ராகுல் டிராவிட் கேப்டன்சியில் ஆடிய அனுபவம் குறித்து வியந்து பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா. 
 

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் பொக்கிஷம். மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ராகுல் டிராவிட். தனது கெரியரில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடிராத வீரர் ராகுல் டிராவிட். 

இந்திய கிரிக்கெட் அணி பல இக்கட்டான சூழல்களில் இருந்தபோது, சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ராகுல் டிராவிட். அதனால் தான் இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படுகிறார் ராகுல் டிராவிட். 

தலைசிறந்த பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட்டுக்கு அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை. இந்திய அணியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டபோதிலும், கேப்டனாகவும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

ராகுல் டிராவிட்டுக்கு ஒரு பேட்ஸ்மேனாக எப்படி கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ, அதேபோலத்தான் கேப்டன்சியிலும் குறைத்து மதிப்பிடப்பட்டார். இந்திய அணியை 25 டெஸ்ட் மற்றும் 79 ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். ராகுல் டிராவிட் சிறந்த கேப்டன் தான். அவரது கேப்டன்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டில், வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்களை வென்றுள்ளது. ஆனாலும் 2007 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அவரது கேப்டன்சியில் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது அவரது கேப்டன்சி கெரியரில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. 

ராகுல் டிராவிட் நீண்டகாலம் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவில்லை என்றாலும், அவரது குறைந்த கேப்டன்சி காலத்தில் இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 

கேப்டன் என்றதும் கங்குலியை பற்றியும் தோனியை பற்றியும் புகழ்ந்து பேசுபவர்கள் யாருமே டிராவிட்டை பற்றி பேசுவதில்லை. ஆனால் அவர் கேப்டன்சியை பொறுத்தமட்டில் மற்றவர்களுக்கு சளைத்தவர் அல்ல. ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியை பற்றி ஏற்கனவே இர்ஃபான் பதான், கவுதம் கம்பீர் ஆகியோர் புகழ்ந்து பேசியுள்ளனர். 

2005-2007 காலக்கட்டத்தில் ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் ஆடிய வீரர்கள், அவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துவருகிறார்கள். 

அந்தவகையில், ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் இளம் வீரராக ஆடிய சுரேஷ் ரெய்னா, டிராவிட்டின் கேப்டன்சி பற்றி வியந்து புகழ்ந்துள்ளார். 

2006ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சென்றபோது அந்த அணியில் ரெய்னா இடம்பெற்று ஆடினார். அப்போது, முல்தானில் நடந்த ஒருநாள் போட்டியில், ராகுல் டிராவிட்டின் ஆட்டத்தின் மீதான பார்வை, வீரர்களின் பேட்டிங் உத்தி பற்றிய அவரது கணிப்பு ஆகியவை தனக்கு வியப்பளித்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். 

ஏபிபி நியூஸில், கபில் தேவுடனான உரையாடலில் பேசிய ரெய்னா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாயிண்ட் திசையில் பிடித்த கேட்ச் ஒன்று நினைவிருக்கிறது. ராகுல் டிராவிட் தான் கேப்டன். இர்ஃபான் பதான் பவுலிங்கில் காம்ரான் அக்மல் அடித்த பந்தை கேட்ச் பிடித்தேன். 6 ஓவர்களாக விக்கெட் விழவில்லை.

6 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடினர். 7வது ஓவரை இர்ஃபான் பதான் வீச, சல்மான் பட் சிங்கிள் அடிக்க, பேட்டிங் முனைக்கு காம்ரான் அக்மல் வந்தார். உடனே என்னை அழைத்த டிராவிட், ஷார்ட் பாயிண்ட் திசையில் நிற்க முடியுமா? என்று கேட்டார். கண்டிப்பாக.. நீங்க எங்கே நிற்க வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என்று நான் சொன்னேன். 

சற்று குனிந்தபடி முன்னோக்கி வா என்று சொல்லி என்னை ஷார்ட் பாயிண்ட்டில் நிறுத்தினார். ராகுல் டிராவிட் என்னை அங்கு நிற்கவைத்த அடுத்த பந்திலேயே என்னிடம் கேட்ச் கொடுத்து காம்ரான் அக்மல் அவுட்டானார். ராகுல் டிராவிட் நினைத்ததை போலவே அக்மல் சரியாக பாயிண்ட் திசையில் அடிக்க, நான் கேட்ச் பிடித்தேன். ஒரு ஃபீல்டர் எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ரெய்னா தெரிவித்தார். 

அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 161 ரன்களில் ஆல் அவுட்டாக, அந்த இலக்கை எளிதாக அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. 
 

click me!