2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இந்த மாதிரிலாம் தப்புச்சாதான் உண்டு; இல்லைனா ஆப்புதான்.. இங்கிலாந்து பெரும் சோகம்

By karthikeyan VFirst Published Aug 14, 2020, 9:49 PM IST
Highlights

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், 2 அணிகளையும் விட, மழை செம ஆட்டம் ஆடுவதால், இந்த போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சவுத்தாம்ப்டனில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணி, சரியாக பேட்டிங் ஆடாதபோதிலும், மழையால் இந்த போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. 

பாகிஸ்தான் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி ஆடிய பேட்டிங்கிற்கு, முதல் நாளான நேற்றைய ஆட்டம் முழுவதுமாக நடந்திருந்தால், முதல் நாளிலேயே ஆல் அவுட்டாகியிருக்கும். அந்தளவிற்கு மோசமாக ஆடினர் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள்.

கடந்த போட்டியில் சதமடித்த ஷான் மசூத், ஒரு ரன்னில் வெளியேற, கேப்டன் அசார் அலி 20 ரன்களிலும், ஆசாத் ஷாஃபிக் மற்றும் 11 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் அணியில் ஆடிய ஃபவாத் ஆலம் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். தொடக்க வீரர் அபித் அலி மட்டும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 60 ரன்களில் அபித் அலி ஆட்டமிழந்தார். 

பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் அடித்திருந்தது பாகிஸ்தான் அணி. மழை குறுக்கீட்டால் முதல் நாள் ஆட்டத்தில் வெறும்  45 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. மழையால் பாதி நாள் ஆட்டம் பாதித்தது. 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்திலும் முதல் செசன் கிட்டத்தட்ட முழுவதும் பாதிக்கப்பட்டது. 2வது செசனும் மழையால் பாதிக்கப்பட்டது. மூன்றாவது செசனிலும் மழை குறுக்கிட்டது. இதற்கு இடையிடையே 40 ஓவர்கள் இன்று வீசப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம்(47), யாசிர் ஷா(5), ஷாஹீன் அஃப்ரிடி(0), முகமது அப்பாஸ்(2) ஆகியோர் அவுட்டாகினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் முகமது ரிஸ்வான் மட்டும் களத்தில் நிலைத்து நிற்கிறார். பாகிஸ்தான் அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட இங்கிலாந்து அணி, எஞ்சிய ஒரு விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானை ஆல் அவுட் செய்வதற்குள் மறுபடியும் மழை குறுக்கிட்டது. எனவே 9 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 223 ரன்கள் அடித்த நிலையில், ஆட்டம் தடைபட்டுள்ளது. 
 
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி படுமோசமாக பேட்டிங்கில் சொதப்பியது. இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்த நிலையில் இந்த போட்டியில் மழை குறுக்கீட்டால், பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸுக்கே 2 நாட்கள் ஆகிவிட்டது. எனவே இந்த போட்டியில் இதன்பின்னர் வேகமாக ஆடி முடிவை பெறுவது என்பது நடக்காத காரியம். அந்தவகையில், மழை பெய்தது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 
 

click me!