சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழை.. ராகுல், கோலி, தோனி அபாரம்.. ஆளாளுக்கு சேர்ந்து ஆஸ்திரேலியாவை அடிச்சு நொறுக்கிட்டாங்க

By karthikeyan VFirst Published Feb 27, 2019, 9:06 PM IST
Highlights

23 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்த தோனி, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ராகுல், கோலி, தோனியின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி கடைசி பந்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. 

தொடக்க வீரர்களாக ராகுலும் தவானும் களமிறங்கினர். முதல் 2 ஓவர்களை நிதானமாக கையாண்ட ராகுல், மூன்றாவது ஓவர் முதல் அடித்து ஆட தொடங்கினார். அதன்பிறகு பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார் ராகுல். புல் ஷாட், ஃபிளிக் ஷாட், கவர் டிரைவ் என மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்துகளை பறக்கவிட்டார். 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 47ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே திணறிய தவான், 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் இந்த முறையும் ஏமாற்றமளித்தார். வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் தோனி ஜோடி சேர்ந்தார். 

இருவரும் 11வது ஓவரிலிருந்து 14வது ஓவர் வரை நிதானமாக ஆடினர். இதற்கிடையே தோனி மட்டும் சில பெரிய ஷாட்டுகளை ஆடினார். ஆனால் கோலி நிதானத்தை கடைபிடித்தார். 14 ஓவருக்கு பிறகு கோலி அதிரடியாக ஆட ஆரம்பித்தார். குல்டர்நைல் வீசிய 16வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் கோலி. டார்ஷி ஷார்ட் வீசிய 18வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். 

அபாரமாக ஆடிய கோலி அரைசதம் விளாசினார். கோலியும் தோனியும் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்த தோனி, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார் கோலி. கோலி 38 பந்துகளில் பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்களை குவித்தது. 191 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.
 

click me!