#SLvsIND இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்..! கேப்டன் தவான்

By karthikeyan VFirst Published May 11, 2021, 2:42 PM IST
Highlights

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இந்திய வீரர்களை அடுத்த மாதம் மீண்டும் களத்தில் காணமுடியும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி ஆடுகிறது. 

ஜூன் 18 முதல் 22 வரை நடக்கிறது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. அதன்பின்னர் ஆகஸ்ட் 14 முதல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் ஆடுகிறது.

இதற்கிடையே இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. ஜூலை 13 முதல் ஒருநாள் போட்டிகளும், ஜூலை 22ம் தேதி முதல் டி20 போட்டிகளும் நடக்கின்றன

ஜூன் 18-22ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடும் இந்திய டெஸ்ட் அணி, அடுத்ததாக ஆகஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதால், அதற்கிடையே இலங்கைக்கு வந்துவிட்டு மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்புவது கொரோனா காலத்தில் சாத்தியமில்லாத விஷயம்.

எனவே டெஸ்ட் அணியில் இல்லாத வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் மற்றும் இந்திய அணியில் அடுத்து இடம்பெறவிருக்கும் வீரர்களை வைத்து இலங்கை தொடரில் ஆடவுள்ளது இந்திய அணி. ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய அணியாக அது இருக்கும்.

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து, இன்றைய இளம் வீரர்களை உருவாக்கிவிட்டதே ராகுல் டிராவிட் தான். எனவே அந்த வீரர்கள் நிறைந்த இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!