
விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.
ஜூலை 13 முதல் 25 வரையிலான காலக்கட்டத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி. இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.
இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:
ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.
நெட் பவுலர்கள் - இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்.
இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அனைவருமே தங்களுக்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் அனைவருக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிப்பது நடைமுறை சாத்தியமில்லாதது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், இவ்வளவு சிறிய தொடரில் அனைத்து வீரர்களுக்கும் ஆட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தொடரை வெல்ல வேண்டும் என்பதே பிரதான நோக்கம். டி20 உலக கோப்பைக்கு முன் இதுவே கடைசி டி20 தொடர். தேர்வாளர்கள் ஏற்கனவே டி20 உலக கோப்பைக்கான அணி குறித்த தெளிவுடனேயே இருப்பார்கள் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.