வரலாற்றில் இடம்பிடித்த ஆஃப்கானிஸ்தான் வீரர்.. காலத்தால் அழியாத பெயரை பெற்று சாதனை

By karthikeyan VFirst Published Sep 6, 2019, 11:53 AM IST
Highlights

ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் தான் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. 

ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் தான் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஜாம்பவான் அணியான இந்திய அணியுடன் மோதியதால் அந்த போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

அதன்பின்னர் அடுத்த போட்டியில் அயர்லாந்துடன் மோதியது. அந்த போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்தது ஆஃப்கானிஸ்தான் அணி. இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி அதன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியுடன் ஆடிவருகிறது. 

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. ரஷீத் கான் கேப்டனனான பிறகு ஆஃப்கானிஸ்தான் அணி ஆடும் முதல் போட்டி இது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, ரஹ்மத் ஷாவின் அபார சதம் மற்றும் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கானின் பொறுப்பான 92 ரன்கள் மற்றும் கேப்டன் ரஷீத் கானின் அரைசதத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்களை குவித்துள்ளது. 

இதையடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. இந்த போட்டியில் ரஹ்மத் ஷா சதமடித்ததன் மூலம், ஆஃப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சதத்தின் மூலம் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ரஹ்மத் ஷாவின் பெயர் என்றுமே நிலைத்துநிற்கும். காலத்தால் அழியாத ரெக்கார்டை ரஹ்மத் ஷா செய்துவிட்டார். 

இதே போட்டியில் அஸ்கர் ஆஃப்கானும் சதமடித்திருக்கலாம். ஆனால் 92 ரன்களில் ஆட்டமிழந்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் அஸ்கர் ஆஃப்கான். 
 

click me!