டி காக்கின் விக்கெட்டுக்கு பின் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்திய இந்தியா..! சவாலான இலக்கை விரட்டும் இந்தியா

By karthikeyan VFirst Published Jan 23, 2022, 6:30 PM IST
Highlights

3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 287 ரன்கள் அடித்து 288 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலானை வெறும் ஒரு ரன்னில் இன்னிங்ஸின் 3வது ஓவரிலேயே வீழ்த்தினார் தீபக் சாஹர். 3ம் வரிசையில்  இறங்கிய கேப்டன் டெம்பா பவுமாவை கேஎல் ராகுல் டேரக்ட் த்ரோவின் மூலம் 8 ரன்னில் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். எய்டன் மார்க்ரமும் 15 ரன்னில் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

70 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடினார் குயிண்டன் டி காக். டி காக்குடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாண்டர் டசனும் சிறப்பாக பேட்டிங் ஆடினார். தொடக்கம் முதலே அதிரடியாக அடித்து ஆடி எந்த சூழலிலும் ரன் வேகம் குறையாமல் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்திய குயிண்டன் டி காக் சதமடித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் டி காக்கின் 17வது சதமான இந்த சதம், இந்தியாவிற்கு எதிராக 6வது சதம். 

4வது விக்கெட்டுக்கு டி காக் - டசன் ஜோடி 144 ரன்களை குவித்தது. 130 பந்தில் 124 ரன்கள் அடித்த டி காக்கை பும்ரா வீழ்த்த, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த வாண்டர் டசனை 52 ரன்களுக்கு சாஹல் வீழ்த்தினார். இன்னிங்ஸின் 36வது ஓவரில் டி காக்கும், 37வது ஓவரில் டசனும் ஆட்டமிழந்தனர். டசன் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 218 ரன்கள். அதன்பின்னர் ஃபெலுக்வாயோ, பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ் என ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், டேவிட் மில்லர் மறுமுனையில் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 38 பந்தில் 39 ரன்கள் அடித்த மில்லர் கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக மகாலாவும் ஆட்டமிழக்க, 287 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  288 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணி விரட்டுகிறது.
 

click me!