ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி மன்னன் சேவாக்கின் சாதனையை முறியடித்த டி காக்! ஏபிடி,பாண்டிங்கின் சாதனைகளும் காலி

By karthikeyan VFirst Published Jan 23, 2022, 5:11 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ள குயிண்டன் டி காக், ரிக்கி பாண்டிங், சங்கக்கரா, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலான் ஒரு ரன்னில்  தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேற, மார்க்ரமும் 15 ரன்னில் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார். 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட தென்னாப்பிரிக்க அணியை டி காக்கும் வாண்டர் டசனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய குயிண்டன் டி காக் சதமடித்தார். டி காக்கும் வாண்டர் டசனும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 144 ரன்களை குவித்தனர். 130 பந்தில் 124 ரன்கள் அடித்த டி காக் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த டசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

டி காக் இந்த போட்டியில் அடித்த சதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 17வது சதம்; இந்தியாவிற்கு எதிராக 6வது சதம். இந்த சதத்தின் மூலம் 2 முக்கியமான சாதனைகளை படைத்துள்ளார் டி காக்.

இந்த சதத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 6 சதங்களை விரைவில் அடித்த வீரர் என்ற சாதனையை டி காக் படைத்துள்ளார். வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்து இந்த மைல்கல்லை டி காக் எட்டியுள்ளார். சேவாக் நியூசிலாந்துக்கு எதிராக 23 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 6 சதங்களை அடித்தார். டி காக் இந்தியாவிற்கு எதிராக வெறும் 16 இன்னிங்ஸ்களில் 6 சதங்களை அடித்துவிட்டார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6 சதங்களுடன் இரண்டாம் இடத்தை ரிக்கி பாண்டிங், சங்கக்கரா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய மூவருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தியாவிற்கு எதிராக அதிகபட்சமாக 7 சதங்கள் அடித்த இலங்கையின் ஜெயசூரியா முதலிடத்தில் உள்ளார். 

டிவில்லியர்ஸ் இந்தியாவிற்கு எதிராக 6 சதங்கள் அடிக்க 32 இன்னிங்ஸ்களும், பாண்டிங் 59 இன்னிங்ஸ்களும், சங்கக்கரா 71 இன்னிங்ஸ்களும் எடுத்துக்கொண்டனர். ஆனால் டி காக் வெறும் 16 இன்னிங்ஸ்களில் 6 சதமடித்துள்ளார். டி காக் அவரது கெரியர் முடிவதற்குள் இந்தியாவிற்கு எதிரான அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயசூரியாவை பின்னுக்குத்தள்ளி வேற லெவலுக்கு சென்றுவிடுவார்.
 

click me!