India vs South Africa: குயிண்டன் டி காக் அபார சதம்! டி காக் - டசன் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறும் இந்திய அணி

By karthikeyan VFirst Published Jan 23, 2022, 4:37 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்துள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலானை வெறும் ஒரு ரன்னில் இன்னிங்ஸின் 3வது ஓவரிலேயே வீழ்த்தினார் தீபக் சாஹர். 3ம் வரிசையில்  இறங்கிய கேப்டன் டெம்பா பவுமாவை கேஎல் ராகுல் டேரக்ட் த்ரோவின் மூலம் 8 ரன்னில் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். எய்டன் மார்க்ரமும் 15 ரன்னில் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

70 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடினார் குயிண்டன் டி காக். டி காக்குடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாண்டர் டசனும் சிறப்பாக பேட்டிங் ஆடினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக அடித்து ஆடி எந்த சூழலிலும் ரன் வேகம் குறையாமல் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்திய குயிண்டன் டி காக் சதமடித்தார். இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் டி காக்கின் 6வது சதம் இது. 

டி காக் - டசன் ஜோடி 100 ரன்களை கடந்து ஆடிவருகிறது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் போராடிவருகின்றனர். 31வது ஓவரிலேயே டி காக் சதமடித்துவிட்ட நிலையில், இன்னும் 20 ஓவர்கள் எஞ்சியிருப்பதால் கண்டிப்பாக பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்புள்ளது. டி காக் பெரிய ஸ்கோர் அடித்தால், தென்னாப்பிரிக்காவும் மிகப்பெரிய ஸ்கோர் அடித்து கடின இலக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
 

click me!