IPL 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் இவர் தான்..! ஹின்ட் கொடுத்த கோ-ஓனர்

Published : Feb 18, 2022, 05:06 PM IST
IPL 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் இவர் தான்..! ஹின்ட் கொடுத்த கோ-ஓனர்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்த கேஎல் ராகுலை அந்த அணி மெகா ஏலத்திற்கு முன் கழட்டிவிட்டதையடுத்து, மெகா ஏலம் முடிந்து அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து ஹிண்ட் கொடுத்துள்ளார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கோ ஓனர் மோஹித் பர்மேன்.  

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி மயன்க் அகர்வால் (ரூ.14 கோடி) மற்றும் அர்ஷ்தீப் சிங் (ரூ.4 கோடி) ஆகிய இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் உட்பட மற்ற அனைவரையுமே விடுவித்தது.

பஞ்சாப் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் நடந்துவருகிறது. ஐபிஎல் மெகா ஏலத்தில் தவான், ரபாடா, பேர்ஸ்டோ என சிறந்த வீரர்கள் பலரை அணியில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். 

சீனியர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கும், ஜானி பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. 

ஃபினிஷரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஷாருக்கானை ரூ.9 கோடிக்கும், ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரை ரூ.5.25 கோடிக்கும் எடுத்தது. யாருமே எதிர்பார்த்திராத வகையில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு எடுத்து ஆச்சரியப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

ஏலத்திற்கு முன்பாக வெறும் 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்ததால், ரூ.72 கோடியுடன் ஏலத்திற்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, தங்களுக்கு வேண்டிய வீரர்களை எல்லாம் கோடிகளை கொட்டிக்கொடுத்து எடுத்தது.  வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஒடீன் ஸ்மித்தை ரூ.6 கோடிக்கு எடுத்தது.

இவ்வாறாக ஏலத்தில் நல்ல வீரர்களை எடுத்து வலுவான அணியை கட்டமைத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் உள்ளது. ஷிகர் தவானை அணியில் எடுத்ததால், மயன்க் அகர்வால் - ஷிகர் தவான் ஆகிய இருவரில் யார் கேப்டன் என்ற கேள்வி நிலவிய நிலையில், ஷிகர் தவானை பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில், இந்த கேள்விக்கு சூசகமாக பதிலளித்து தெளிவுபடுத்தியுள்ளார் பஞ்சாப் அணியின் கோ ஓனர் மோஹித் பர்மேன்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள மோஹித் பர்மேன், ஒரு அணியை வழிநடத்துவதற்கு முன்பாக அந்த வீரர் ஏற்கனவே அந்த அணியில் ஆடிய வீரராக இருந்தால் அது பலமாக அமையும். ஏற்கனவே அணியில் ஆடிய ஒருவருக்குத்தான், பயிற்சியாளர் எப்படி சிந்திக்கிறார் என்பது தெரியும் என்றார். 

எனவே அந்தவகையில், மயன்க் அகர்வால் தான் அடுத்த கேப்டன் என்பதை சூசகமாக பர்மேன் தெரிவித்துவிட்டார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!