ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இந்திய வீரர்களை அவர்களது ஓய்வறைக்கு சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி கடந்த 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சரி, பேட்டிங் தான் சரியில்லை, பவுலிங்கில் இந்திய அணி ஜொலிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
undefined
ஆஸ்திரேலியா 2ஆவது பேட்டிங் செய்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஜோடி இந்திய அணியிடமிருந்து வெற்றியை தட்டிச் சென்றுவிட்டனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி முக்கியமான போட்டியான இறுதிப் போட்டியில் போராடி தோல்வி அடைந்தது. தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இந்திய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதையடுத்து, இந்தப் போட்டியை நேரில் பார்க்க மைதானத்திற்கு வந்த மோடி, இந்திய வீரர்களை அவர்களது ஓய்வறைக்கு சென்று தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், குல்தீப் யாதவ் என்று ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி ஆறுதல் கூறியுள்ளார்.