
Preity Zinta Army Donation : ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) இணை உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிண்டா, இராணுவக் குடும்பங்களுக்கு ரூ.1.10 கோடி நன்கொடை அளித்துள்ளார். தென்மேற்கு கட்டளைப் பிரிவின் இராணுவ மனைவியர் நலச் சங்கத்திற்கு (AWWA) இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இது நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரீத்தி ஜிந்தா இந்த நன்கொடையை வழங்கினார். தென்மேற்கு கட்டளைப் பிரிவு இராணுவத் தளபதி, பிராந்தியத் தலைவர் சப்த சக்தி மற்றும் பிற இராணுவக் குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நன்கொடை இராணுவ வீரர்களின் விதவைகளின் மேம்பாட்டிற்கும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்வில் பிரீத்தி ஜிந்தா பேசுகையில், "நமது துணிச்சலான படைவீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவது ஒரு மரியாதை. நமது வீரர்களின் தியாகங்களை நாம் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளித்து, அவர்கள் முன்னேற உதவலாம்" என்றார்.
மேலும், "இந்தியப் படைவீரர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. எங்கள் நாட்டிற்கும், துணிச்சலான படைவீரர்களுக்கும் எப்போதும் துணை நிற்போம்" என்றார். இந்த நன்கொடை இராணுவ விதவைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் என்று AWWA பிரதிநிதிகள் தெரிவித்தனர். பிரீத்தி ஜி்ந்தாவின் இந்தச் செயலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரீத்தி ஜிண்டா தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்.