ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3 உலக கோப்பைகளை வென்றது எப்படி..? சூட்சமத்தை சொன்ன பாண்டிங்

By karthikeyan VFirst Published May 22, 2019, 11:51 AM IST
Highlights

கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை போல சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய அணி என்றால் அது பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தான். 

சர்வதேச கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் ஒட்டுமொத்தமாக வெற்றிகரமான அணி என்றால் அது ஆஸ்திரேலிய அணி தான். 

1970,80களில் வெஸ்ட் இண்டீஸ் அணி கொடிகட்டிப் பறந்தது. 1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு உலக கோப்பையையும் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 1983 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கும் முன்னேறியது. ஆனால் 1983ல் இந்தியாவிடம் கோப்பையை இழந்தது. 

கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை போல சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய அணி என்றால் அது பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தான். தொடர்ந்து இரண்டு உலக கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸின் சாதனையை ஆஸ்திரேலிய அணி முறியடித்தது. 

1999ல் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. அப்போது அந்த அணியில் ஆடிய இளம் வீரர் பாண்டிங், அடுத்த உலக கோப்பை தொடரில் கேப்டன் ஆனார். 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன்மூலம் 1999, 2003, 2007 என தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வென்று அசத்தியது ஆஸ்திரேலிய அணி. அந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய அணிதான் அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தி நம்பர் 1 அணியாக இருந்தது. 

அதன்பின்னர் 2011 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது ஆஸ்திரேலிய அணி. 2015 உலக கோப்பையை மீண்டும் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்துமுறை கோப்பையை வென்று அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது. 

இந்த உலக கோப்பையையும் ஆஸ்திரேலிய அணி வெல்லும் முனைப்பில் உள்ளது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ஹாட்ரிக் உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றதன் ரகசியத்தை ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங், அந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவான அணியாக திகழ்ந்தது. எங்கள் அணியில் தலைசிறந்த பவுலர்கள் இருந்தார்கள். சிறந்த பவுலிங் அட்டாக்குடன், அணியின் ஸ்பிரிட்டும் அபாரமாக இருந்தது. தொடர்ந்து வெல்லப்பட்ட அந்த 3 உலக கோப்பை அணிகளில், 1999 மற்றும் 2003 ஆகிய இரண்டு தொடருக்கான அணிகளிலும் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட ஒரே அணிதான் ஆடியது என்று பாண்டிங் தெரிவித்தார். 

கோர் டீமும் டீம் ஸ்பிரிட்டும் சிறந்த பவுலிங் யூனிட்டும்தான் தொடர்ந்து 3 கோப்பைகளை வெல்ல காரணம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 
 

click me!