#AUSvsIND சபாஷ் பாய்ஸ்.. ஆஸி.,யை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

By karthikeyan VFirst Published Jan 19, 2021, 1:54 PM IST
Highlights

ஆஸி.,யை வீழ்த்தி 2-1 என டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இதையடுத்து தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி., அணி 369 ரன்களும், இந்திய அணி 336 ரன்களும் அடிக்க, 33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி 294 ரன்கள் அடித்து, 328 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. 

கடைசி நாளில் அடிப்பதற்கு சவாலான அந்த இலக்கை, ஷுப்மன் கில்(91), ரிஷப் பண்ட்(89) ஆகியோரின் அபாரமான பேட்டிங் மற்றும் புஜாராவின் அரைசதம்(56) ஆகியவற்றால் 328 ரன்கள் என்ற இலக்கை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 2வது முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதுவும், கோலி, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, ஜடேஜா, அஷ்வின், கேஎல் ராகுல் ஆகிய நட்சத்திர விரர்கள் பலர் காயத்தால் தொடர்ந்து வெளியேறிய நிலையிலும், இருக்கும் வீரர்களை வைத்து சாதித்துக் காட்டியுள்ளது இந்திய அணி.

இந்திய அணி, ஆஸி., மண்ணில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ள நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது பாராட்டை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி, ஆஸி., மண்ணில் இந்திய அணி அடைந்திருக்கும் இந்த வெற்றியை நாம் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுகிறோம். இந்த சுற்றுப்பயணம் முழுவதும் இந்திய அணியின் சக்தி மற்றும் வேட்கை அபாரமானது. மேலும் நமது வீரர்களின் மன உறுதி பார்க்க சிறப்பாக இருந்தது. எதிர்காலத்திலும் வெற்றி தொடர வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.
 

We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia. Their remarkable energy and passion was visible throughout. So was their stellar intent, remarkable grit and determination. Congratulations to the team! Best wishes for your future endeavours.

— Narendra Modi (@narendramodi)
click me!