#AUSvsIND கடைசி டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி..! ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை

By karthikeyan VFirst Published Jan 19, 2021, 1:18 PM IST
Highlights

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் நடந்த டெஸ்ட் டிரா ஆனது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி, லபுஷேனின் சதம்(108), டிம் பெய்னின் அரைசதம்(50), மேத்யூ வேட் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரின் பொறுப்பான இன்னிங்ஸால், முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் அடித்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டும் 44 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இந்திய அணி 186 ரன்களுக்கே ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் ஷர்துல் தாகூரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 7வது விக்கெட்டுக்கு 123 ரன்களை குவித்தனர். ஷர்துல் தாகூர் 67 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் அடித்தது.

33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி, 2வது இன்னிங்ஸில் சிராஜ் மற்றும் தாகூரின் வேகத்தில் 294 ரன்களுக்கு சுருண்டது. மொத்தமாக 327 ரன்கள் ஆஸி., அணி முன்னிலை பெற்ற நிலையில், 328 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்ட தொடங்கிய, 2வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டதால், 4ம் நாள் ஆட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஓவர்கள் பாதிக்கப்பட்டது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் தொடர்ந்தனர். ரோஹித் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் புஜாராவும் சேர்ந்து சிறப்பாக ஆடினர். புஜாரா வழக்கம்போலவே ஒருமுனையில் நங்கூரத்தை போட, மறுமுனையில் அடித்து ஆடிய ஷுப்மன் கில் 146 பந்தில் 91 ரன்கள் அடித்து சதத்தை 9 ரன்களில் நழுவவிட்டு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் ரஹானே 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஐந்தாம் வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட், மிகத்தெளிவாக அடித்து ஆடினார். மறுமுனையில் புஜாரா மிக மந்தமாக ஆடியதால், இலக்கை எட்ட அடித்து ஆட வேண்டும் என்ற பொறுப்பை தனது தோள்களில் சுமந்து, அடித்து ஆடினார் ரிஷப் பண்ட். அரைசதம் அடித்த புஜாரா, 211 பந்தில் 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

மயன்க் அகர்வால் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் ரிஷப் பண்ட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி 22 ரன்கள் அடித்து நேதன் லயனின் பந்தில் ஆட்டமிழந்தார். அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரிஷப் பண்ட், கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 2வது முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
 

click me!