ஜெகதீசனின் காட்டடியால் பெங்காலை வீழ்த்தி வெற்றி நடை போடும் தமிழ்நாடு.! எதிர்த்து அடிக்க டீமே இல்ல.. செம கெத்து

By karthikeyan VFirst Published Jan 18, 2021, 11:24 PM IST
Highlights

ஜெகதீசனின் மற்றுமொரு பொறுப்பான அதிரடி அரைசதத்தால் பெங்காலை வீழ்த்தி, சையத் முஷ்டாக் அலி தொடரில் வெற்றி பயணத்தை தொடர்கிறது தமிழ்நாடு அணி.
 

சையத் முஷ்டாக் அலியில் முதல் போட்டியில் ஜார்க்கண்ட்டையும், 2வது போட்டியில் அசாமையும், 3வது போட்டியில் ஒடிசாவையும், 4வது போட்டியில் ஹைதராபாத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, பெங்காலுக்கு எதிரான ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் தமிழ்நாடு மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி வீரர் கைஃப் அகமது சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். கைஃப் ஒருமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மறுமுனையில் பெங்கால் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர், சிறப்பாக ஆடிய கைஃப் 47 பந்தில் 63 ரன்கள் அடித்தார். அவரது அரைசதத்தால் பெங்கால் அணி 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது.

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 14 ரன்களிலும் அருண் கார்த்திக் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஹைதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடியதை போலவே, இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ஜெகதீசன், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆட, ஜெகதீசனின் வேலை எளிதானது. அடித்து ஆடி 45 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 71  ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்று தமிழ்நாடு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சையத் முஷ்டாக் அலி தொடரில் கெத்தாக நடைபோடுகிறது.
 

click me!