
இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். ராய் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஃபிலிப் சால்ட் அடித்து ஆடினார்.
சால்ட்டுடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மலானும் அடித்து ஆட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய சால்ட் 82 பந்தில் சதமடித்தார். 93 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸருடன் 122 ரன்களை குவித்தார் சால்ட். சால்ட்டும் மலானும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர்.
சால்ட்டை தொடர்ந்து டேவிட் மலானும் சதம் விளாசினார். மலானுடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் அடித்து ஆடி அரைசதம் விளாசினார். 37 ஓவரிலேயே இங்கிலாந்து அணி 293 ரன்களை குவித்துள்ளது. சதமடித்து களத்தில் நன்கு செட்டில் ஆன மலான் மற்றும் அதிரடி மன்னன் பட்லர் ஆகிய இருவரும் களத்தில் இருப்பதால் இங்கிலாந்து அணி 400 ரன்களை கடப்பது உறுதி.