உன் இடத்துக்கு 4 பேர் வரிசைகட்டி நிற்கிறாங்க; இப்படியே போச்சுனா உனக்கு டீம்ல இடமே கிடைக்காது! பதான் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Jun 17, 2022, 4:28 PM IST
Highlights

ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பினால் இந்திய அணியில் இடத்தை இழப்பார் என்று இர்ஃபான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தோனிக்கு அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடித்தவர் ரிஷப் பண்ட். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், தோனியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரிஷப் பண்ட், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்திய அணியில் தனக்கான இடத்தையும், ரசிகர்களின் அபிப்ராயத்தையும் பெற்றார்.

ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ஐபிஎல்லில் சரியாக ஆடாத ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், கேப்டன்சியிலும் சுமாராகவே செயல்படுகிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய அங்கமான ரிஷப் பண்ட்டின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகிய வீரர்களும் உள்ள நிலையில், ரிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டம்,  இந்திய அணியில் அவரது இடத்தை இழக்க வழிவகுக்கும் என்று இர்ஃபான் பதான் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், ரிஷப் பண்ட் ஸ்டக் ஆகிவிட்டார். அவர் நன்றாக ஆடியே தீரவேண்டும். இப்போது ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டன்சி வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் இந்திய அணியின் ஆடும் லெவனில் அவருக்கான இடத்தை பிடிக்கவே கடுமையாக போராடும் நேரம் வரும். 

ஏற்கனவே தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு வரிசைகட்டி நிற்கின்றனர். கேஎல் ராகுலும் விக்கெட் கீப்பிங் செய்வார். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட்டர். எனவே விக்கெட் கீப்பருக்கான போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் இப்படியே சொதப்பி கொண்டிருந்தால் அணியில் இடத்தை இழக்க நேரிடும் என்று இர்ஃபான் பதான் எச்சரித்துள்ளார்.
 

click me!