#PSL டேவிட் மில்லரின் அதிரடி அரைசதத்தால் பெஷாவர் அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 13, 2021, 3:06 PM IST
Highlights

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் டேவிட் மில்லரின் அதிரடி அரைசதத்தால் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி பெற்றது.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி பெஷாவர் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் அணியின் தொடக்க வீரர் ஹைதர் அலி முதல் பந்திலேயே டக் அவுட்டானார். 3ம் வரிசையில் இறங்கிய ஷோயப் மாலிக்கும் 2 ரன்னில் ட்டமிழக்க, 10 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பெஷாவர் அணி. 

ஆனால் அதன்பின்னர் தொடக்க வீரர் காம்ரான் அக்மலும் 4ம் வரிசையில் இறங்கிய டேவிட் மில்லரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினர். அபாரமாக ஆடிய இருவருமே அரைசதம் அடிக்க, 3வது விக்கெட்டுக்கு அந்த ஜோடி 125 ரன்களை குவித்தது. 37 பந்தில் 59 ரன்கள் அடித்து காம்ரான் அக்மல் ஆட்டமிழந்தார்.

டேவிட் மில்லர் 46 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார். டெத் ஓவர்களில் அடித்து ஆடிய ரோவ்மன் பவல் 19 பந்தில் 43 ரன்களை விளாச, 20 ஓவரில் பெஷாவர் அணி 197 ரன்களை குவித்தது.

198 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சயீம் அயூப்(35) மற்றும் உஸ்மான் கான்(28) ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து 62 ரன்களை சேர்த்தனர். ஆனால் அவர்கள் ஆட்டமிழந்த பின்னர், அந்த அணியில் எந்த வீரருமே சரியாக ஆடாமல் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெஷாவர் அணி. டேவிட் மில்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
 

click me!