பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆட பிசிசிஐ உறுதியாக மறுப்பு தெரிவித்ததால், இங்கிலாந்தில் ஆசிய கோப்பை நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு இல்லாததால் இருநாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படவில்லை. இந்தியாவிற்கு வந்து ஆடவும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆடவும் பாகிஸ்தான் விரும்புகிறது.
ஆனால் இந்திய அரசு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அதனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆனால் அதிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதில்லை.
இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பதால் ஆசிய கோப்பை பொதுவான இடத்திற்கு மாற்றப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து கூற, அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக அதிருப்தியையும் விமர்சனங்களை வெளிப்படுத்திவருகிறது.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் நிலையில், மற்ற அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பிரச்னை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பதால் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் பரிந்துரையை கொடுத்தது. ஆனால் இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்களை அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டன.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பையை நடத்துவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். ஆனால் பாகிஸ்தானுக்கு பதிலாக இங்கிலாந்தில் நடத்தப்படும். இதுதொடர்பாக இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால் இங்கிலாந்தில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக நஜாம் சேதி தெரிவித்திருக்கிறார்.