
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 118 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறவே ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் 18ஆவது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் 2 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதே போன்று போட்டியின் கடைசி ஓவரையும் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கரீம் ஜனத் ஆட்டமிழக்க 2ஆவது பந்தில் குல்பதீன் நைப் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக பேட் கம்மின்ஸ் இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் தான் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் ஜாம்பவான் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ் இன்று படைத்துள்ளார்.