U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!

Published : Dec 21, 2025, 06:17 PM IST
Sameer Minhas U19 Asia Cup vs India

சுருக்கம்

இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இந்திய அணி கேப்டன் சிஎஸ்கேவில் அங்கம் வகிக்கும் ஆயுஷ் மாத்ரே வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை (U19 Asia Cup 2025) கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும்.

U19 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் சாம்பியன்

பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 26.2 ஓவரில் வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 191 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இந்திய அணி கேப்டன் சிஎஸ்கேவில் அங்கம் வகிக்கும் ஆயுஷ் மாத்ரே வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பைனலில் 172 ரன்கள், இந்த தொடர் முழுவதும் 471 ரன்கள் குவித்த சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

சமீர் மின்ஹாஸ் தொடர் நாயகன்

இது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பயில் பாகிஸ்தான் வெல்லும் இரண்டாவது பட்டமாகும். 2012-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் கோப்பையை பகிர்ந்து கொண்டிருந்தன. கோப்பையை வென்றதால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த சமீர் மின்ஹாஸ், ''இது எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு தருணமாகும். என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடி பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஆடுகளத்தைப் பார்த்து முதலில் பேட்டிங் செய்யவே நாங்கள் விரும்பினோம்'' என்றார்.

இந்திய கேப்டன் சொல்வது என்ன?

படுமோசமான தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, ''நாங்கள் முதலில் பந்துவீசுவதில் உறுதியாக இருந்தோம். ஆனால் பந்துவீச்சின் லைனில் தடுமாற்றங்கள் இருந்தன. 50 ஓவர்களும் விளையாட வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. இந்தத் தொடர் எங்களுக்கு நன்றாக அமைந்தது மேலும் சில வீரர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!