சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!

Published : Dec 18, 2025, 10:18 PM IST
Chepauk Stadium

சுருக்கம்

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சேப்பாக்கம் சர்வதேச ஸ்டேடியம் உள்ளது. பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியம் உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின் என இரண்டு சர்வதேச ஸ்டேடியங்கள் உள்ளன.

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே 4வது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. வடமாநிலங்களில் இப்போது பனிமூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் போட்டியை திட்டமிட்டது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தென்னிந்தியாவில் போட்டிகளை நடத்த வேண்டும்

இந்த நிலையில், வட இந்தியாவில் குளிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்துமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (BCCI) வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சசி தரூர், ''இந்திய கிரிக்கெட் அணி தென்னிந்தியாவில் வந்து விளையாடலாம். ஏனெனில் அங்கு மாசுப் பிரச்சனை இல்லை. பார்வைத்திறன் பிரச்சனையும் இல்லை, ரசிகர்களும் போட்டியை ரசிக்க முடியும். ஆண்டின் இந்த நேரத்தில் வட இந்தியாவில் ஏன் போட்டிகளைத் திட்டமிட வேண்டும்? மாறாக, தென்னிந்தியாவில் திட்டமிட வேண்டும்" என்றார்.

பிசிசிஐ சொல்வது என்ன?

முன்னதாக, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "பனிமூட்டம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. இதனால் மக்கள் வருத்தமடைந்தனர். வட இந்தியாவில் டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை போட்டிகளைத் திட்டமிடுவதை நாங்கள் மறுஆய்வு செய்ய வேண்டும். அவற்றை தென்னிந்தியா அல்லது மேற்கு இந்தியாவிற்கு மாற்ற வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். உள்நாட்டுப் போட்டிகளும் பனிமூட்டத்தால் பாதிக்கப்படுகின்றன. இது ஒரு தீவிரமான பிரச்சினை" என்று கூறியிருந்தார்.

வடமாநிலங்களில் தொடர் போட்டிகள்

குறிப்பாக, டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரையிலான காலகட்டத்தில், 50 ஓவர் போட்டியான விஜய் ஹசாரே டிராபி டிசம்பர் 24 முதல் ஜனவரி 18 வரை நடைபெற உள்ளது. ஜெய்ப்பூர் இந்தப் போட்டிக்கான இடங்களில் ஒன்றாகும். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதி டி20 போட்டி வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும்.

தென்னிந்தியாவில் ஏராளமான ஸ்டேடியங்கள்

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சேப்பாக்கம் சர்வதேச ஸ்டேடியம் உள்ளது. பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியம் உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின் என இரண்டு சர்வதேச ஸ்டேடியங்கள் உள்ளன. ஆகவே பனிமூட்ட காலங்களில் வட இந்தியாவில் போட்டிகளை நடத்துவதை விட்டு தென்னிந்தியாவிலும் மேற்கண்ட மைதானங்களில் போட்டிகளை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!
சுப்மன் கில் காயம்.. 5வது T20 போட்டியில் விலகல்.. அதிரடி மன்னன் சேர்ப்பு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!