ஒரே மேட்ச்ல மொத்தமும் போச்சே.. பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் வருத்தம்

By karthikeyan VFirst Published Jul 6, 2019, 5:21 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து பெற்றுள்ள 11 புள்ளிகளை பெறும்பட்சத்தில் லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணிதான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்று வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்திருந்தார். 
 

உலக கோப்பை தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன. 

இந்த உலக கோப்பையில் துரதிர்ஷ்டமான அணி என்றால் அது பாகிஸ்தான் தான். லீக் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய வலுவாக அணிகளை வீழ்த்தி 11 புள்ளிகளை பெற்றும் கூட அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. பாகிஸ்தான் அணி பெற்ற அதே 11 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது. 

உலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியது பாகிஸ்தான் அணி. ஆனாலும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியதுதான் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணம். 

பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து பெற்றுள்ள 11 புள்ளிகளை பெறும்பட்சத்தில் லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணிதான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்று வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்திருந்தார். 

ஆனால் நெட் ரன்ரேட் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்பதால் பாகிஸ்தான் வெளியேறியது. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நல்ல அணிகளை வீழ்த்தியும் கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது தான் அதிருப்தியளிக்கக்கூடிய விஷயம் தான்.

வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்று வெற்றிகரமாக உலக கோப்பையை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதற்கான காரணம் குறித்து பேசினார். 

இதுகுறித்து பேசிய சர்ஃபராஸ் அகமது, நாங்கள் நன்றாக ஆடியும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டம் தான். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அந்த படுதோல்விதான் எங்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது என்று சர்ஃபராஸ் அகமது தெரிவித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 106 ரன்கள் என்ற இலக்கை 14வது ஓவரிலேயே எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. அந்த ஒரு தோல்வியிலேயே பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் மைனஸ் 5க்கும் கீழாக சென்றுவிட்டது. அந்த தோல்விதான் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அந்த படுதோல்விதான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். 
 

click me!