#T20WorldCup சீனியர் வீரரை கேட்டு அடம்பிடிக்கும் பாக்., கேப்டன் பாபர் அசாம்! டீமில் எடுக்க மறுக்கும் தேர்வாளர்

By karthikeyan VFirst Published Aug 19, 2021, 5:31 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சீனியர் வீரரான ஷோயப் மாலிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கேப்டன் பாபர் அசாம் அடம்பிடிக்கிறார். ஆனால் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் மாலிக்கை எடுக்க மறுக்கிறார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பார்க்கப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால், பாகிஸ்தான் அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

டி20 உலக கோப்பைக்கான அணிகளை தேர்வு செய்யும் பணியில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தீவிரமாக இறங்கியுள்ளன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தேர்வு பணிகள் நடந்துவருகின்றன. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி நம்பிக்கையளிக்கின்றனர். ஆனால் மிடில் ஆர்டரில் பிரச்னை இருக்கிறது.

மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வாக, சீனியர் ஆல்ரவுண்டரான ஷோயப் மாலிக்கை அணியில் எடுக்க வேண்டும் என்று கேப்டன் பாபர் அசாம், தேர்வுக்குழுவிடம் தெரிவித்ததாகவும், ஆனால் தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் 39 வயதான மாலிக்கின் ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவரை அணியில் எடுக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1999ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக ஆடிவரும் ஷோயப் மாலிக் அணியின் சீனியர் வீரர் ஆவார். 39 வயதான ஷோயப் மாலிக், 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மாலிக் மிகச்சிறந்த வீரர் ஆவார்.

பேட்டிங்கில் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை ஆடிவரும் வெகுசில வீரர்களில் மாலிக்கும் ஒருவர். 116 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவமிக்கவர் மாலிக். மாலிக்கின் அனுபவம் அணிக்கு தேவை என பார்க்கிறார் பாபர் அசாம். ஆனால் தலைமை தேர்வாளர் முகமது வாசிமோ, மாலிக்கின் ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவரை அணியில் எடுக்க ஆர்வம் காட்டாததாக தெரிகிறது.
 

click me!