2 பேரை தவிர வேற எல்லாருமே ஒற்றை இலக்கம்.. சொற்ப ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 8, 2019, 3:50 PM IST
Highlights

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் இஃப்டிகர் அகமதுவை தவிர வேறு எந்த வீரருமே சரியாக ஆடாததை அடுத்து, அந்த அணி ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் எளிதான இலக்கை நிர்ணயித்துள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. 

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்தது. பாகிஸ்தான் அணியில் இஃப்டிகர் அகமது மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி 45 ரன்களை சேர்த்தார். இமாம் உல் ஹக் 14 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே இரட்டை இலக்கத்தையே தொடவில்லை. 

பாகிஸ்தான் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான பாபர் அசாமை மூன்றாவது ஓவரிலேயே வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க். பாபர் அசாம் 6 ரன்களில் அவுட்டாக, அதற்கு அடுத்த பந்திலேயே கிளீன் போல்டாகி கோல்டன் டக்கவுட்டாகி வெளியேறினார் முகமது ரிஸ்வான். அவரைத்தொடர்ந்து ஹாரிஸ் சொஹைல், குஷ்தில் ஷா, இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் பொறுப்புடன் ஆடிவந்த இஃப்டிகர் அகமதுவும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே அடித்தது. 

107 ரன்கள் என்பது ஆஸ்திரேலிய அணிக்கு மிக மிக எளிய இலக்கு. இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி அசால்ட்டாக அடித்து வென்றுவிடும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். 
 

click me!