அண்டர் 19 உலக கோப்பை.. அரையிறுதியில் பாகிஸ்தானை பார்சல் கட்டிய இந்திய வீரர்கள்

By karthikeyan VFirst Published Feb 4, 2020, 5:05 PM IST
Highlights

அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 172 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.

அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரு அரையிறுதி போட்டியிலும், நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மற்றொரு அரையிறுதியி போட்டியிலும் மோதுகின்றன. 

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியை தொடக்கம் முதலே அடித்து ஆட விடாமல், அதேநேரத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, 172 ரன்களுக்கே சுருட்டியது. 

பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை சுஷாந்த் மிஷ்ரா வீழ்த்தினார். தொடக்க வீரர் முகமது ஹுரைராவை வெறும் 4 ரன்களில் வெளியேற்றினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஃபஹாத் முனீர், 16 பந்துகள் பேட்டிங் ஆடி, ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஹைதர் அலி 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் ரொஹைல் நசீர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில், காசிம் அக்ரம், முகமது ஹாரிஸ், இர்ஃபான் கான், அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரொஹைல் அரைசதமடித்தார். அதன்பின்னர் பொறுப்புடன் ஆடிய அவரை சுஷாந்த் மிஷ்ரா 62 ரன்களில் வீழ்த்தினார். அவர் 8வது விக்கெட்டாக அவுட்டாக, அதன்பின்னர் அடுத்த 2 ஓவர்களிலேயே எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் இந்திய பவுலர்கள்.

இதையடுத்து பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் சுஷாந்த் மிஷ்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  173 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடுகிறது. 
 

click me!