#T20WorldCup என்ன டீம் எடுத்து வச்சுருக்காய்ங்க.. டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வை ஆய்வு செய்ய பிரதமர் உத்தரவு

By karthikeyan VFirst Published Sep 28, 2021, 5:57 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வை ஆய்வு செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான், ஷோயப் மாலிக் ஆகிய வீரர்கள் அணியில் எடுக்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில மணி நேரங்களில் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் பயிற்சியாளர் பதவிகளிலிருந்து விலகினர். 

அனுபவ வீரர் ஷோயப் மாலிக்கை அணியில் எடுக்க வேண்டும் என்று கேப்டன் பாபர் அசாம் எவ்வளவோ வலியுறுத்தியும் தேர்வாளர்கள் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. மாலிக், ஜமான் புறக்கணிக்கப்பட்ட அதேவேளையில், விக்கெட் கீப்பராக அசாம் கான் எடுக்கப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது.
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு மீது கேப்டன் பாபர் அசாமே அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வை ஆய்வு செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவிடம் பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள அசாம் கான், முகமது ஹஸ்னைன், குஷ்தில் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஃபகர் ஜமான், ஷர்ஜீல் கான், ஷோயப் மாலிக், ஷாநவாஸ் தஹானி மற்றும் உஸ்மான் காதிர் ஆகிய வீரர்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!