மிட்செல் ஸ்டார்க் மிரட்டலான பவுலிங்.. ஆஸ்திரேலிய அணியிடம் மண்டியிட்டு சரணடைந்த பாகிஸ்தான் வீரர்கள்

By karthikeyan VFirst Published Nov 30, 2019, 5:30 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் அபாரமாக ஆடி 589 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, சிறப்பாக பவுலிங் வீசி பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளை மளமளவென சரித்தது. 
 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் நான்காவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வார்னரும் லபுஷேனும் இணைந்து அபாரமாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 361 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடிக்க, லபுஷேன் 162 ரன்களில் அவுட்டாகி இரட்டை சதத்தை தவறவிட்டார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஸ்மித் 36 ரன்களில் ஆட்டமிழக்க, இரட்டை சதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடிய வார்னர், முச்சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முச்சதத்தை அடித்த வார்னர், 400 ரன்களை குவிக்கும் முனைப்பில் அதிரடியாக ஆடினார். ஆனால் அவர் 335 ரன்கள் அடித்திருந்த நிலையில், அணியின் ஸ்கோர் 589 ரன்களாக இருந்தபோது கேப்டன் டிம் பெய்ன் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள், இதே பிட்ச்சில்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடினார்களா என்ற சந்தேகம் எழுமளவிற்கு மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 5வது ஓவரிலேயே தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கை மிட்செல் ஸ்டார்க் வெறும் 2 ரன்னில் வீழ்த்தினார். இதையடுத்து கேப்டன் அசார் அலியை 9 ரன்களில் கம்மின்ஸும் ஷான் மசூத்தை ஹேசில்வுட்டும் வீழ்த்தினர். 

38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. அதன்பின்னர் ஆசாத் ஷாஃபிக்கை 9 ரன்களில் வீழ்த்திய ஸ்டார்க், இஃப்டிகார் அகமது மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். 24வது ஓவரில் ஆசாத்தை வீழ்த்திய ஸ்டார்க், 32வது ஓவரில் இஃப்டிகாரையும் ரிஸ்வானையும் வீழ்த்தினார். 

89 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வழக்கம்போல பாபர் அசாம் நிலைத்து நின்று ஆடிவருகிறார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது. பாபர் அசாமும் யாசிர் ஷாவும் களத்தில் உள்ளனர். 
 

click me!