இந்திய சுற்றுப்பயணத்தின் முடிவை தீர்மானித்ததே அந்த 2 பசங்கதான்..! இன்சமாம் உல் ஹக் புகழாரம்

By karthikeyan VFirst Published Jun 26, 2020, 6:06 PM IST
Highlights

2005 இந்திய சுற்றுப்பயணத்தில் இரண்டு இளம் வீரர்கள் சீனியர் வீரர்களுக்கு பாடம் கற்று கொடுத்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டினார். 
 

2005 இந்திய சுற்றுப்பயணத்தில் இரண்டு இளம் வீரர்கள் சீனியர் வீரர்களுக்கு பாடம் கற்று கொடுத்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டினார். 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன. 

கங்குலி தலைமையிலான இந்திய அணியும் இன்சமாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதிய காலக்கட்டம் தான் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட்டில் மிகச்சிறந்த காலக்கட்டமாகும். 

ஏனெனில் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தியது. தற்போது இந்திய அணி பாகிஸ்தான் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறது. கங்குலி - இன்சமாம் தலைமையிலான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சமபலத்துடன் திகழ்ந்தன. சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் என இந்திய அணியும், இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுஃப், சல்மான் பட், ஷோயப் மாலிக், காம்ரான் அக்மல், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர், அப்துல் ரசாக் என பாகிஸ்தான் அணியும் சமபலத்துடன் திகழ்ந்தன. 

அப்படியான சூழலில் 2003-04ல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றதால், 2004-05ல் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்தபோது, இன்சமாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மீது அதிகமான அழுத்தம் இருந்தது. 

அந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவை டெஸ்ட் தொடரை வெல்லவிடாமல் சமன் செய்துவிட்ட பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரை வென்று வெற்றியுடன் நாடு திரும்பியது. 

பாகிஸ்தான் அணி 2005ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்தது. மொஹாலியில் நடந்த முதல் போட்டி டிரா ஆனது. அடுத்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடர் சமனடைந்தது. 

மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் காம்ரான் அக்மலும் அப்துல் ரசாக்கும் ஆடிய இன்னிங்ஸை வெகுவாக புகழ்ந்துள்ளார் இன்சமாம் உல் ஹக். அந்த குறிப்பிட்ட போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. அதனால் அந்த அணி 312 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 516 ரன்களை குவித்தது. 

200 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக காம்ரான் அக்மலும் அப்துல் ரசாக்கும் இறக்கப்பட்டனர். இருவரும் இந்திய அணியின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ஆடி ஸ்கோர் செய்தனர். அக்மல் 109 ரன்களையும் அப்துல் ரசாக் 71 ரன்களையும் குவித்தனர். அவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை நன்றாக பயன்படுத்தி, அணியின் சீனியர் வீரர்களான இன்சமாம் உல் ஹக், முகமது யூசுஃப் ஆகியோர் சிறப்பாக ஆட, இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 496 ரன்களை குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியதால் தான் அந்த போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. 

இந்நிலையில், காம்ரான் அக்மல் - ரசாக் ஆகியோரின் ஒரு இன்னிங்ஸ், ஒட்டுமொத்த அணியின் மனநிலையையே மாற்றியதாக இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். 

அந்த குறிப்பிட்ட இந்திய சுற்றுப்பயணம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இன்சமாம் உல் ஹக், ஜூனியர் வீரர்கள் அருமையாக ஆடும்போது, அவர்களால் முடிந்தது நம்மால் முடியாதா என்று தானாகவே சீனியர் வீரர்களுக்குள் உற்சாகம் பிறக்கும். நிறைய முறை இதுமாதிரி நடந்திருக்கிறது. 2005 இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட்டில், காம்ரான் அக்மல் சதமும் ரசாக் 70(71) ரன்களும் அடித்தனர். அவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய ஆட்டத்தை பார்த்து, சீனியர் வீரர்களான நான், யூசுஃப் மற்றும் யூனிஸ் கான் ஆகியோர், இளம் வீரர்களான அவர்களால் முடிந்தது நம்மால் முடியாதா என்று நினைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். 

அந்த ஒட்டுமொத்த தொடரின் வெற்றியை தீர்மானித்தது, இரண்டு இளம் வீரர்கள் தான் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். 
 

click me!