
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கராச்சியில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் அணியில் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், முகமது ரிஸ்வான் (38), ஹைதர் அலி (31), இஃப்டிகார் அகமது (32), ஷதாப் கான் (28) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 172 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி 173 ரன்களை வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயித்தது.
173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிரண்டன் கிங் அதிரடியாக ஆடி 43 பந்தில் 67 ரன்களை விளாசினார். கேப்டன் நிகோலஸ் பூரன் 26 பந்தில் வெறும் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்வரிசையில் சிறப்பாக ஆடிய ரொமாரியோ ஷ்ஃபெர்டு 19 பந்தில் தலா 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து கடைசி வரை போராடினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 163 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது.
இதையடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-0 என தொடரை வென்றது.