#WIvsPAK 2வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அபார வெற்றி..! ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்றார் ஷாஹீன் அஃப்ரிடி

By karthikeyan VFirst Published Aug 25, 2021, 2:29 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தானின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடியே, தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
 

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த பாகிஸ்தான் அணியை, பாபர் அசாமும் ஃபவாத் ஆலமும் இணைந்து மீட்டனர். 

பாபர் அசாம் 75 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த ஃபவாத் ஆலம் 124 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான். 2ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 3ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை முடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி அபாரமாக பந்துவீசி 150 ரன்களுக்கு சுருட்டினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அபாரமாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி, 6 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் யாருமே சரியாக ஆடாததால், 150 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் வீரர்கள், அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். 27.2 ஓவரில் 176 ரன்களை விரைவாக சேர்த்தனர் பாகிஸ்தான் வீரர்கள். 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்த நிலையில், 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து, 329 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தது.

329 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க வீரர் பவல் மட்டுமே ஆட்டமிழந்திருந்த நிலையில், கேப்டன் பிராத்வெயிட்டுடன் நைட் வாட்ச்மேன் அல்ஸாரி ஜோசஃப் ஜோடி சேர்ந்து களத்தில் இருந்ததுடன் 4ம் நாள் ஆட்டம் முடிந்தது.

கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் ஆடிய பாகிஸ்தான், அல்ஸாரி ஜோசஃபை 17 ரன்களில் வீழ்த்தியது. அவரைத்தொடர்ந்து பானரை 2 ரன்னிலும்,  ரோஸ்டான் சேஸை ரன்னே அடிக்கவிடாமலும், பிளாக்வுட்டை 25 ரன்னிலும் வீழ்த்த, வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. 

எப்படியாவது இந்த போட்டியை டிராவாவது செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் முதல் செசனை நன்றாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட்டை 2வது செசன் தொடங்கிய உடனேயே 39 ரன்னில் வீழ்த்தினார் நௌமன் அலி. அதன்பின்னர் மற்ற வீரர்கள் அடுத்த 106 ரன்களுக்குள் ஆட்டமிழந்ததால் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதையடுத்து 109 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றதையடுத்து, 1-1 என டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் அவர் நன்றாக பந்துவீசியிருந்ததால், தொடர் நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
 

click me!