பாகிஸ்தான் கம்பேக்.. டெஸ்ட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Dec 23, 2019, 12:22 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 263 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என தொடரை வென்றது.
 

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் டிரா ஆனது. இரண்டாவது போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. 

கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்கள் அடித்தது. 

80 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சிறப்பாக ஆடிய இருவருமே சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 278 ரன்களை குவித்தனர். ஷான் மசூத் 135 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அபித் அலியுடன் கேப்டன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். அபித் அலியுடன் இணைந்து அவரும் சிறப்பாக ஆடினார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த அபித் அலி 174 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் அசார் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். 

இவர்களும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஒவ்வொரு விக்கெட்டையும் எடுப்பதற்குள் இலங்கை பவுலர்கள் நொந்து போயினர். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானின் பேட்டிங் ஆர்டரை சரித்த இலங்கை பவுலர்களால், இரண்டாவது இன்னிங்ஸில் அப்படி செய்ய முடியவில்லை. 355 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. 

மூன்றாவது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் அசார் அலியும் இணைந்து 148 ரன்களை குவித்தனர். கேப்டன் அசார் அலியும் சதமடித்தார். 118 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பாபர் அசாமும் சதமடித்ததுடன், 3 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன்மூலம் 475 ரன்கள் முன்னிலை பெற்றது பாகிஸ்தான் அணி. 

476 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோவும் டிக்வெல்லாவும் மட்டுமே சிறப்பாக ஆடினர். ஃபெர்னாண்டோ சதமடித்தார். டிக்வெல்லா 65 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரை தவிர மற்ற அனைவருமே மிக மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி.

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர் நசீம் ஷா, அபாரமாக பந்துவீசி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து இந்த போட்டியில் 263 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு 60 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 80 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களில் முறையே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை தழுவிவந்த பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் வெற்றி பெற்று மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு மிகவும் தேவையான ஒன்று மட்டுமல்லாமல் அவர்களுக்கு கண்டிப்பாக உத்வேகத்தையும் அளித்திருக்கும். 
 

click me!